Thursday, March 4, 2021

 



இலங்கையின் இனவெறி வன்முறை வரலாறு 4 - 

தேசமுகி

 மலையகத்திலிருந்து வந்து வடக்கு கிழக்கு போராளிகளுடன் தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து களமாடி காவியமான பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள்  மலையகத் தமிழ் மாவீரர்களுக்கும் காணிக்கையாக வரலாறு விரிகிறது. 

                                  
 மலையகத் தமிழர்

மலையக மக்களின் பலம் அவர்கள் இலங்கையில் 15 இலட்சம் பேர் வாழ்கின்றனர் என்பதாகும். ஆனாலும் இத்தனை இலட்சம் பேரும் நிலத்தொடர்பற்ற வகையில் தமது வாழ்விடங்களைக் கொண்டுள்ளது பலவீனமாகும். வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழர் போன்று இவர்கள் குறித்த ஒரு நிலத் தொடர்புள்ள பிரதேசத்தில் வாழவில்லை. பல்வேறு மாவட்டங்களில் சிங்கள மக்களுடன் இணைந்ததான பிரதேசங்களில் வாழ்கின்றனர். எனவே அரசநிர்வாக விடயங்களில் சிங்கள கிராம நிலதாரிகள் இவர்களை புறக்கணிப்பது இலகுவாகி விடுகின்றது. இவர்கள் செறிவாக வாழும் நுவரெலியா பதுளை மாவட்டங்களிலேயே புறக்கணிப்பு பரவலாக இருக்கும்போது செறிவு குறைவாகவுள்ள மாவட்டங்களில் நிலை படுமோசமாகவே இருக்கும்.               

    இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் 250 ஆண்டுகளுக்கு மேலான இலங்கை வாழ் வரலாற்றில் 70வருடகால அரசியல் தொழிற்சங்க வரலாறும் உள்ளடங்குகின்றது.  1947 களில் இவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தனர். அது இனவாதிகளின் கண்களை உறுத்தவே மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பின்னர் 1977 வரை நியமனத் தெரிவின் மூலம் அரசியல் காலம் தள்ளியமையும் 1977க்குப்பின் இன்றுவரை அவர்களின் அபிவிருத்திப் பணிகள் என்ற போர்வையில்  அரசாங்கத்துடனான கைகோர்ப்புடன் அரசியல் நகர்ந்து செல்ல இன்னும் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடாத மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர். 

         எவ்வகையிலேனும் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகளை புறந்தள்ளிப் பார்க்காது இவர்களது அடிப்படை பிரச்சினைகள் குறித்து பார்வையை செலுத்துவது பொருத்தமானது. இன்னும் மலையகத் தமிழர்களில் பலருக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரமோ, தேசிய அடையாள அட்டையோ  இல்லை. (இவை  முறையாகப் பதியப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டும் உண்டு.) இன்னும் மலையகத் தமிழர்களில்  பலருக்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும். தமது ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் வாக்குரிமை முழுமையாக இல்லை அல்லது வாக்காளர் இடாப்புகளில் அவர்களை பதிவு செய்துகொள்வதில் திட்டமிட்ட புறக்கணிப்பு இடம்பெறுகின்றது. ஏன் இவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்றுகூட இன்னும் முழுமையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இந்த நிலைமைக்கு காரணம் என்ன?

                       


     தமிழர் மீதான இனவழிப்பில் முதலில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட வாக்குரிமைப் பறிப்பும் மலையகத் தமிழர்களின் அரசியல்  வரலாற்றையும் அதன் பின்ணியையும் பாhக்க வேண்டும்;. இலங்கைத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் என்பதைவிட பூர்விகக் குடிகள் அல்ல இவர்கள் என்பதைக் குறிக்குமுகமாக “மலையகத் தமிழர்” என்று குறிக்கப்பட்டனர் எனக் கருதும் ஆய்வாளர்கள் கூற்றும் உண்டு. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஏனெனில் பூர்விகக் குடிகள் அல்லாத மலாயர்கள் பறங்கிகள் எல்லாம் இலங்கையின் குடிகளாக வாக்குரிமையுடன் இருக்கும் பொழுது இவர்களை மட்டும் வந்தேறு குடிகள் என்று பிரித்து வைக்கும் மனப்பான்மையும்,  இலங்கையில் வந்து குடியேறிய இவர்களின் வரலாறும் விரிவாக திட்டமிடப்பட்ட இனவழிப்பின் ஓரங்கமாகவே ஆராயப்பட வேண்டிய ஒன்று. இங்கு மலையகத் தமிழர்கள் என்று பயன்படுத்துவது வடக்குக் கிழக்குத் தமிழர்கள் போல் மலையகத்தில் வாழும் எமது தமிழ்ச் சமூகம் எனும் கருத்தியல் அடிப்படையே ஆகும். 

            விஜயனின் வரவு முதல் பார்த்தால் சிங்களர்கள் கூட  வந்தேறுகுடிகளின் மரபு வழியினரே.   விஜயனின் 700 தோழர்களுக்கான மனைவிகளை தமிழ்நாட்டில்  இருந்து எடுத்தது மட்டுமன்றி  1400களில் மொகலாயப் படையெடுப்பின் பொழுது இங்கு வந்து யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு கொழும்புப் பகுதிகளில் குடியேறிய வணிகத் (செட்டிதமிழர்கள்) சிவன் கோயிலைக் கட்டிய  வரலாறு என விரிந்து செல்லும் வரலாறு. கோப்பித் தோட்டங்களிற்கான தொழிலாளர்கள் தாமாக வந்தவர்களை விட அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்கள் எனும் வரலாறும் உண்டு. இதன் முன்பே இந்தியத் தமிழர்கள் இலங்கையின் மையப்பகுதியை நோக்கி தொழில் நிமித்தம் குடியேறியதற்கும் தமிழ் மன்னர்களின் ஆட்சிகளும் என மற்றும் பலகாரணங்களும் உண்டு. அதற்கு முன்பும் தமிழ்நாட்டு மக்கள் இங்கு குடியேறியுள்ள வரலாறும் உண்டு.  

1600 களில் இந்தியாவில் நிலவரிகளை விதித்து  ஏழை விவசாயிகள் மீது திணித்து இரத்தம் குடிக்கும் அட்டைபோல் அவர்கள் உழைப்பை எல்லாம் உறுஞ்சிய பிரிட்டிஷாரின் ஆட்சி செல்வ வளம் கண்டது. வங்காளத்தில் சாசுவத நிலவரி, தென்னிந்தியாவில் ரயத்துவாரி, வட இந்தியாவில் மௌஜாவாரி, பஞ்சாப்பில் பஞ்சாயத்து வாரி என வரி விதித்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துத் தமது வருவாயைப் பெருக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம். அன்றும் , இன்றும் மானிட வர்க்கத்திற்கே உணவு வழங்கும் உத்தம விவாசாயிகளின் வாழ்வே குறிப்பாகத் தொழிலாளர்களின் வாழ்வே ஆட்சியாளர்களினதும், ஆட்சியைத் தீர்மானிக்கும் செல்வந்தர்களின் சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றது. 

   1678-1685 வரை ஏழுவருடம் நீடித்த தாதுவருடப் பஞ்சமானது பதினைந்து இலட்சம் மக்களைக் காவு கொண்டது. இந்தப் பஞ்சத்தில் தப்பிப் பிழைப்பதற்காக ஈழத்தில் சென்று குடியேறிய தமிழர்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் மாரியம்மனை வைத்து வழிபாடு செய்தனர்.  சிவனை வழிபடும் செட்டியார், முதலியார் என்கின்ற வணிகர் இனமும்  இவர்களுள் அடங்குவர். இதற்கான ஆதாரமாக 1706 இல் கண்டியில் இருந்து தூது சென்ற குழுவில் கண்டியில் வாழ்ந்த சிதம்பரநாத், அடையப்பன் என்ற இரண்டு தமிழ் பிரமுகர்கள் இருந்தமையை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இவர்கள் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து டச்சுக்காரர்களின் கப்பலில் மதுரை சென்றதாக வரலாறு இயம்புகின்றது. ஒருபுறம் பஞ்சம், மறுபுறம் மேல்சாதியினர் மற்றும் அதிகார வர்க்கங்களிற்கிடையே பாக்குவெட்டியில் சிக்குண்ட பாக்குப்போல்  சிக்கித்தவித்த மக்கள் இன்றும் அதேநிலையில்தான் நசுக்கப்படுகின்றார்கள்.  தோட்டத் தமிழ் தொழிலாளிகள் வரவிற்கு முன்னும் பின்னும்  மலையகத் தமிழர்கள் வரலாறு தனி ஆய்வாக தொகுக்கப்பட்டு பதிவு செய்து பார்க்க வேண்டிய அவசியம் காலத்தின் கட்டளையாகும்.  

(Photos Credit pictorialrecord.blogspot.com)