இலங்கையின் இனவன்முறை வரலாறு – 1
தொகுப்பு தேசமுகி
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்கள். இக் கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 யூூன் 5 இல் முடிவுக்கு வந்தது. கலவரம் நிறுத்தப்பட்ட நேரத்தில், ஒன்பது நாட்களில் 4,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் கடைகள் சூறையாடப்பட்டு 17 மசூதிகள் எரிக்கப்பட்டன. முஸ்லீம்கள் வந்தேறு குடிகள் எனும் பொருள் கொண்ட “மரக்கல மினிசு” (கள்ளத்தோணிகள்) என்றே தாக்கப்பட்டனர்.
வரலாற்றை விமர்சன ரீதியாக ஆராய்வது நிகழ்காலத்திற்கான மதிப்புமிக்க படிப்பினைகளை வெளிப்படுத்த முடியும் என்று வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர். அதனடிப்படையில் முஸ்லீம்கள் மார்க்க ரீதியாக முஸ்லீம்களாக இருந்தாலும் அவர்கள் தமிழ் பேசும் தமிழர்களே. எனவே இலங்கைத் தமிழர்கள் மீதான இனவழிப்பையும் 1915 இல் இருந்தே உற்றுநோக்கி சூட்சும நிகழ்ச்சி நிரல் பின்னணிகளை ஆய்வு செய்யவேண்டும்.
1915 ஆண்டு மே மாதம், வெசாக் பெரஹராவின் போது கண்டியில் ஒரு மசூதிக்கு வெளியே நடந்த சண்டையைத் தொடர்ந்து, தீவு முழுவதும் பரவிய முஸ்லீம் எதிர்ப்பு வன்முறை அலைகளில் கும்பல் 25 பேரைக் கொன்றது, நான்கு பேரை பாலியல் பலாத்காரம் செய்தது, பல முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடியது. 189 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் இராணுவச் சட்டத்தை அறிவித்தது, அதன் இராணுவமும் காவல்துறையும் குறைந்தது 63 பேரைக் கொன்றனர். ஆங்கில தன்னார்வலர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றவர்கள், அரசின் மறைமுக ஒப்புதலுடன் மக்களை வெளிப்படையாக சுட்டுக் கொன்ற பதிவுகளும் உள்ளன.1915 இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இன்றைய தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பின் நாயகர்கள் இங்கிருந்துதான் உருவாகினார்கள். 1915 சிங்கள-முஸ்லீம் கலவரங்களின் அரசியல் கொந்தளிப்பின் முன் யாரென்றே தெரியாது பெயரற்று இருந்த சிலர் தங்களை இனவெறி மணிகள் மற்றும் விசில்களால் அலங்கரித்து வரலாற்றில் வில்லன்களாக அறிமுகமாகி பௌத்த சிங்கள கதாநாயகர்கள் ஆனார்கள். பௌத்த சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவினரைத் தூண்டித் தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயினும் கலவரத்திற்குத் திட்டமிட்ட இவர்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்தை சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் காணப்பட்டனர். எது எவ்வாறு இருப்பினும்; கையில் எடுத்த ஆயுதம் சிங்கள பௌத்த பேரினவாதமே! இத்தகைய முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவரே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டொன் ஸ்ரீபன் சேனநாயக்க (20 ஒக்ரோபர் 1884- 22 மார்ச் 1952). வரலாற்றில் இவர் ஒரு மரண தண்டனைக்; கைதி.
1915 நடைபெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரத்தினைத் தொடர்ந்து ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டு டீ.எஸ்.சேனானாயக்கா, ஆர்.டயஸ் பண்டாரநாயக்கா, டீ.எஸ்.விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ.டீ. த.சில்வா, எச்.அமரசூரிய, ஏ.எச்.மொலமூறே போன்ற பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார். இப் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், பொன்.இராமநாதன் நாடு திரும்பியபோது காலிமுகத்திடலில் தங்கள் தோள்களில் அவரைச் சுமந்து வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர். அதேவேளை இலங்கைத் தமிழ் தலைவராக இருந்த பொன்.இராமநாதன், சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டமையே தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதுமட்டுமன்றி ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் தங்களை முதலில் இலங்கையர்கள் என்றும் பின்னர் தமிழர்கள் என்று கருதியவர்களாகவும் செயற்பட்டனர் என்றும் ஆய்வாளர்கள் கருத்துக்கள் கூறுகின்றன.
இவ்வாறு மரண தண்டனைக் கைதியாக இருந்து இராமநாதன் அவர்களால் காப்பாற்றப்பட்ட டி.எஸ்.சேனநாயக்க 1929 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஓர் உறுப்பினரானார். 1931 அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேர் பட்டத்தை ஏற்க மறுதலித்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார்.
இலங்கை சுதந்திரம் பெறு முன்னரே சட்ட அவையில் காணி, வேளாண்மை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் காணி மேம்பாடு என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி அவற்றில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் குடியேற்றினார். வேளாண்மை காணி அமைச்சராக விவசாயம், காணி அபிவிருத்தித்தித் திட்டம் என்ற போர்வையில் தமிழர்தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை திட்டமிட்டு உருவாக்கி இனவழிப்பின் மறைமுகச் சூத்திரதாரியாக இந்த இனவெறி அரசியல்வாதி விளங்கினார். 1948 இல் டி.எஸ்.சேனநாயக்கா தனது மகன் டட்லி செல்ரன் சேனநாயக்காவை காணி, அமைச்சராக நியமித்து கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற வழிகோலினார். இதே ஐக்கிய தேசியக் கட்சியில் சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைச்சராக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அங்கம் வகித்தார். கண்டியில் கோயில் பூசாரி நீலப்பெருமாள் பண்டாரம் வழிவந்த இவர்கள் பண்டாரநாயக்கா எனும் பெயர் கொண்ட சிங்களரான கதையைத் தனியாகப் பார்ப்போம்.
டி.எஸ்.சேனநாயக்கா பௌத்தராக குறிப்பிட்டிருந்தாலும் இவர் பெற்றோரின் பெயரும் வழிபாடும் இவர் பிறப்பிலேயே கிறிஸ்தவராகவே இருந்ததைத் தெரிவிக்கின்றன. இறப்பர் தோட்ட முதலாளியான முதலியார் டொன் ஸ்பேற்றர் சேனநாயக்க மற்றும் டோனா கேத்தரினா எலிசபெத் பெரேரா சேனாநாயக்க இவரது பெற்றோர்கள் ஆவார். முதலில் பௌத்தர்களாகவும் அரசியல்-வியாபாரத் தேவைகளுக்காக கிறிஸ்தவர்களாகவும், பின்னர் பௌத்தர்களாகவும் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் என்றால் மிகையாகாது.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து 1952, மார்ச் 22 இல் இறக்கவே, மார்ச் 26 இல் டி.எஸ்.சேனநாயக்காவின் மூத்த மகன் டட்லி செல்ரன் சேனாநாயக்கா (19 யூன் 1911 – 13 ஏப்ரல் 1973) இலங்கைப் பிரதமராக இலங்கை ஆளுநர் சோல்பரி பிரபுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(தொடரும்)




No comments:
Post a Comment